பதிவு செய்த நாள்
23
மார்
2022
06:03
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில், பேட்டராய சுவாமி கோவில் சொர்க்கவாசல் கோபுரம் இடிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பேட்டராய சுவாமி கோவில் உள்ளது.
பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தேர்த்திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுவிமர்சையாக நடக்கும். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து, பல ஆயிரம் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். இக்கோவிலிலுள்ள பழமையான சொர்க்கவாசல் கோபுரம் இடிக்கப்பட்டுள்ளது. கோபுரம் சிதிலமடைந்து மிகவும் மோசமாக இருந்ததால், அதை இடித்து விட்டு புதிதாக கட்டுவதாக, கோவில் தரப்பில் கூறப்படுகிறது. உரிய அனுமதி பெறாத நிலையில், கோபுரத்தை இடித்தவர்கள் மீது, ஹிந்து சமய அறநிலையத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உண்மையிலேயே கோபுரம் சிதிலமடைந்து இருந்ததால் இடிக்கப்பட்டதா அல்லது வேறு யாராவது துாண்டுதலின்படி கோபுரம் இடிக்கப்பட்டதா என்ற கேள்வி பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இச்சம்பவம் வெளியில் தெரிந்தால், பிரச்னை பெரிதாகி விடும் என நினைத்து, அதிகாரிகள் மறைத்து வருகின்றனர் என, பக்தர்கள் புலம்புகின்றனர். இதுபோன்ற சம்பவம் நடந்தும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, பக்தர்களை அதிருப்தியடைய செய்துள்ளது. இது குறித்து, கோவில் செயல் அலுவலர் ஜோதியிடம் கேட்டபோது, ‘‘நேரில் சென்று பார்த்து விட்டு தகவல் தெரிவிக்கிறேன். ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம், கோபுரத்தை இடிக்க எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை. உண்மையான நிலவரத்தை தெரிந்து தகவல் தருகிறேன்,’’ என்றார்.