பதிவு செய்த நாள்
24
மார்
2022
08:03
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பிரசித்திபெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா, முதல் யாகசாலை பூஜைகளுடன் நேற்று 23.3.22 மாலை தொடங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்றதும், மார்க்கண்டேயனுக்காக எமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் 60, 70, 80, 90, 100 ஆகிய வயது பூர்த்தி அடைந்தவர்கள் சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் இருபத்தைந்தாவது குருமகாசந்நிதானம் ஆட்சி காலத்தில் 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது அதனை எடுத்து 26வது குருமகா சன்னிதானம் ஆட்சிக் காலத்தில் 1997ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் செய்யப்பட்டு வரும் 27ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெறகிறது. நேற்று முதல்கால யாகசாலை பூஜைக்காக அமிர்தகடேஸ்வரர் சன்னிதியில் ஆவாகனம் செய்யப்பட்ட கடங்கள் மாலை 6.30மணியவில் தருமை ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் கடங்கள் புறப்பாட்டு யாகசாலைக்கு எழுந்தருளச்செய்து முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இரவு 9மணியளவில் 27வது குருமகா சன்னிதானம் முன்னிலையில் முதல்காலயாகசாலை பூஜைபூர்ணாஹுதிசெய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. இதில் புதுச்சேரி அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடம் 33 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கனகசபை சுவாமிகள், ரத்தினகிரி சுவாமிகள் பாலமுருகன் அடிமைகள், ஆதீன திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்ததம்பிரான்,மாணிக்கவாசகதம்பிரான் மற்றும் தம்பிரான்சுவாமிகள், சென்னை மகாலட்சுமி, ஆதீன கோயில்களின் மேலாளர் மணி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் நிருபர்களிடம் கூறுகையில் வரும் மார்ச் 27 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி உத்திராடம் நட்சத்திரம் அமிர்த யோகம் ரிஷப லக்னத்தில் காலை 10 மணி முதல் 11:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது அதையொட்டி 72 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெறகிறது.
120 வேத விற்பன்னர்கள் 27 திருமுறை ஓதுவார்கள் திருமுறை பாராயணம், அபிராமி அந்தாதி பாராயணம், மிரித்திங்கா ஜெபம் ஆகியவைநடக்கிறது. முக்கியஸ்தர்கள், பக்தர்கள், எந்த ஒரு இடையூறும் இன்றி வழிபாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி.சுகுணாசிங் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும், அடிப்படை வசதிகளான கழிப்பறை குடிநீர் உள்ளிட்டவைகளும், மேலும் ஒவ்வொரு பணிக்காக ஒவ்வொரு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு இறையருள் பெறலாம் என்றார்.