பதிவு செய்த நாள்
24
மார்
2022
08:03
கமுதி: கமுதி முத்துமாரி அம்மன் கோயிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வினோத நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
கமுதி முத்துமாரி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர்.இந்நிலையில் தினந்தோறும் முத்துமாரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட பூதவாகனம், காமதேனு, ரிஷப வாகனத்தில் வந்து கழுகேற்றம்,யானை, அன்னப்பறவை, சிம்ம வாகனத்தில் வீதி உலா வந்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் உடல்முழுவதும் களிமண் பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வினோதமான முறையில் முக்கிய வீதிகளில் ஆடி,பாடி ஊர்வலமாக வந்து கோயில் முன்பு தரையில் படுத்து அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். வினோத வழிபாடனது கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து செய்து வருவதாகவும், இதன்மூலம் பக்தர்கள் கொடிய நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளவும், தேமல், தோல் வியாதி, மஞ்சள் காமாலை, அம்மை நோயிலிருந்து காத்து வருவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.பின்பு கோயில் அருகே பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சென்னை, மதுரை உட்பட வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.