திருக்கடையூர் அபிராமி அம்மன் – அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாணம் கேலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2022 03:03
மயிலாடுதுறை : திருக்கடையூர் கும்பாபிஷேகத்தின் தொடர்ச்சியாக திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுர ஆதீன மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா நேற்று காலை நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதற்காக சுவாமி மற்றும் அம்பாள் திருமணக்கோலத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். சீர்வரிசை எடுத்து வந்து வேதியர்கள் மந்திரம் முழங்க ஹோமம் வளர்க்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மாங்கல்ய தாரணம் செய்யப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து ஊஞ்சலில் சுவாமியும் அம்பாளும் மணக்கோலத்தில் காட்சி அளித்தனர். தருமபுரம் ஆதீனம் 27ஆவது மடாதிபதியை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலய கலையரங்கில் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.