தூசி படிந்த நிலையில் மீனாட்சி அம்மன் சிலை: பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மார் 2022 07:03
மதுரை : மதுரை புது நத்தம் ரோடு பறக்கும் பாலம் துாண்களில் பொருத்துவதற்காக செய்யப்பட்ட மாதிரி மீனாட்சி அம்மன் சிலை சில ஆண்டுகளாக துாசி படிந்த நிலையில் ரோட்டில் கிடப்பதை பார்க்க வேதனையாக உள்ளது என பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
புது நத்தம் ரோடு ஐ.ஓ.சி., ரவுண்டானா முதல் ஊமச்சிகுளம் செட்டிகுளம் வரை 7.3 கி.மீ.,க்கு ரூ.670 கோடியில் பறக்கும் பாலம் கட்டும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்பாலத்தை தாங்கி நிற்க 200க்கும் மேற்பட்ட கான்கிரீட் துாண்கள் கட்டப்பட்டுள்ளன.நத்தம் - மதுரை பகுதி பால துாண்களில் மீனாட்சி அம்மன் சிலையும், மதுரை - நத்தம் பகுதி பால துாண்களில் கள்ளழகர் சிலையும் வைக்கப்படுகிறது. துாண்களின் பக்கவாட்டில் மதுரையின் பாரம்பரிய பெருமைகளை பறைசாற்றும் ஓவியங்கள் தீட்டப்படுகின்றன.முதற்கட்டமாக ஐ.ஓ.சி., ரவுண்டானா பகுதியில் உள்ள இரண்டாவது துாணில் மாதிரி கள்ளழகர், மீனாட்சி அம்மன் சிலைகள் பொருத்தப்பட்டது. மூன்றாவது துாணின் கீழே மீனாட்சி அம்மன் சிலை சில ஆண்டுகளாக சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. துாசி படிந்துள்ள அந்த சிலைக்கு பகுதி பக்தர்கள் சிலர் தீபாரதனை காட்டி வருகிறார்கள். சித்திரை திருவிழா நடக்கவுள்ள நிலையில் ரோட்டில் மீனாட்சி அம்மன் சிலை கிடப்பது வேதனை தருகிறது. எனவே அதை உரிய இடத்தில் பொருத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.