பதிவு செய்த நாள்
04
ஏப்
2022
01:04
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே தி.பாறைப்பட்டி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோபால்பட்டி அருகே திம்மனநல்லூர் ஊராட்சி பாறைபட்டியில் உள்ள விநாயகர், காளியம்மன், பகவதி அம்மன், தக்ஷிணாமூர்த்தி, முருகன், துர்க்கை உள்ளிட்ட கோயில்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ஏப்ரல் 1 காலை விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த கலசங்கள் மற்றும் முளைப்பாரி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, முதல் கால யாக வேள்வி தொடங்கியது. ஏப்ரல் 2 இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி, கனி மூலிகை வேள்வி, வேதபாராயணம், நிறையலி அளித்தல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை நான்காம் கால யாக வேள்வி, ருத்ர ஜபம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு, காலை 10 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மேலே குறிப்பிட்ட தெய்வங்களின் கோவில்களுக்கு கும்பங்களில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது கருடன் வானத்தில் வட்டமடித்ததை கண்ட பக்தர்கள் ஜெய் காளி என கோஷமிட்டனர்.அதனைத் தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.