சாத்துார்: சாத்துார் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நேற்று இரவு நடந்தது. சாத்துார்முக்குராந்தலில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா கடந்த மார்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மாரியம்மன் சப்பரம், ரிஷபம், சிம்மம், பூ பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. பல்வேறு மண்டகப்படியார்களின் சார்பில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை பூஜைகள் நடந்தது. பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் விழா நேற்று இரவு நடந்தது. சாத்தூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ காளியம்மன் கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர் . இதன்பின்னர் அதிகாலை ஒரு மணியளவில் ஸ்ரீ காளியம்மன் கோவில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன்பின்னர் ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் சுவாமிகளுக்கு படைப்புச் சோறு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக இரவு 8 மணியளவில் சாத்தூர் வைப்பாற்றில் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கோயிலுக்கு அக்கினிச்சட்டி , ஆயிரம் கண், பானை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை சுவாமிக்கு செலுத்தி வழிபட்டனர். சாத்தூர் நகராட்சி சார்பில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.