பதிவு செய்த நாள்
09
ஏப்
2022
08:04
திருவாரூர் : ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே உள்ள திருவோணமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் சமஸ்தானம் ஞானபுரீ சித்திரகூட சேத்திரம் ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி ஆஞ்சநேய ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆஞ்சநேயரின் வலது புறம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரும், இடதுபுறம் கோதண்ட ராமர், சீதாதேவி, லட்சுமணர், பவ்ய ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி உள்ளனர்.
இக்கோவிலில் எழுந்தருளியுள்ள 33 அடி உயரம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேய ஸ்வாமி தனது இடுப்பில் நோய் மற்றும் சங்கடங்களை நிவர்த்தி செய்யும் சஞ்சீவி மூலிகைகளுடன் அருள்பாலிப்பது உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும். இந்த ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டால் சங்கடங்கள் யாவும் நீங்கி, மங்களம் உண்டாகும். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் பூச நட்சத்திரம் நவமி திதி சித்தயோகம் கூடிய நாளை காலை 10 மணிக்கு ஸ்ரீ ஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் ஸ்ரீ சேத்திர சகடபுர ஸ்ரீ வித்யாபீடம் ஸ்ரீ திவ்யாபிநவ சிசி கிருஷ்ணானந்த தீர்த்த மஹாஸ்வாமிகளின் பரிபூரண அருள் முன்னிலையில் ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவம் நடைபெறுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மகோற்சவத்தின் முதல் நாளான இன்று காலை 8:30 மணிக்கு மங்கல இசையும், தொடர்ந்து பஜனை, அஷ்டபதி திவ்ய நாம பஜனை ஆகியவை நடைபெறுகின்றன.
2ம் நாளான நாளை காலை 8:30 மணிக்கு ஸ்ரீ சீதா கல்யாண வைபோகம் தொடங்கி பகல் 12 மணிக்கு ஸ்ரீ ராமச்சந்திர பிரபு, சீதா பிராட்டியாருக்கு திருமாங்கல்ய தாரணம் செய்யும் நிகழ்வும், திருக்கல்யாண வைபவம், மதியம் ஒரு மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. இந்த கல்யாண வைபவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் தர்ம அதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர், அறங்காவலர்கள் ஜெகன்நாதன், வெங்கட்ராமன் மற்றும் திருவோணமங்கலம் கிராம மக்கள் செய்து வருகின்றனர். ஸ்ரீ சீதா கல்யாண மஹோத்ஸவத்தில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு அருளை பெறவேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு திருமாங்கல்ய சரடு, மஞ்சள் கிழங்கு, குங்குமம் ஆகிய மங்களப் பொருட்களும், பூஜிக்கப்பட்ட 1 ரூபாய் நாணயமும் பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.