பதிவு செய்த நாள்
19
ஏப்
2022
09:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பக்தர்கள் வருகையால் களை கட்டியுள்ளது; வரும், 21ல், திருத்தேரோட்டம் நடக்கிறது.உடுமலையில், நுாற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இகக்கோவிலில், ஆண்டுத்தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
உடுமலை சுற்றுப்புற கிராம மக்கள் ஒன்று கூடி, கொண்டாடும் தேர்த்திருவிழா, கடந்த, 5ம் தேதி, நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.அம்மனுக்கு பூச்சொரிதல், திருக்கம்பம்போடுதல், கொடியேற்றம், பூவோடு எடுத்தல், மஞ்சள் நீர், வேப்பிலை, தீர்த்தம் திருக்கம்பத்திற்கு ஊற்றுதல் மற்றும் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் என கோவில் வளாகம் பக்தர்கள் வருகையால் களை கட்டியுள்ளது.தினமும் மாலை, 7:00 மணிக்கு, காமதேனு, யானை, ரிஷபம் என பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று மாலை, அன்னவாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. மேலும், பக்தர்கள் அலகு குத்தியும், பறவைக்காவடி, முளைப்பாலிகை எடுத்து வந்தும், மாரியம்மனையும், சூலத்தேவரையும் வழிபட்டனர்.
இன்று இரவு,10:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. நாளை (20ம் தேதி) அதிகாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு, முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி திருக்கல்யாண உற்சவம் இடம்பெறுகிறது.இதற்காக, பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வருதல், திருக்கல்யாண விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து, 8:00 மணிக்கு, சூலத்தேவர், அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன், மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 21ம் தேதி, காலை, 6:45 மணிக்கு, மகா சக்தி மாரியம்மன், சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளலும், மாலை, 4:15 மணிக்கு, பக்தர்கள் திருத்தேர் வடம் பிடிக்க, திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.நகர மக்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களிலிருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால், தேர்த்திருவிழா முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோடும் வீதிகள் மேம்படுத்தல், போக்குவரத்து மாற்றம், பக்தர்கள் வசதி, பாதுகாப்பு என அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளன.வரும் 22ம் தேதி, காலை, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு, 8:00 மணிக்கு, அம்மன் குதிரை வாகனத்தில் பரி வேட்டைக்கு எழுந்தருளல் மற்றும் குட்டைத்திடலில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது.
23ம் தேதி, காலை, 10:30க்கு, கொடியிறக்கம், 11:30க்கு, மகா அபிேஷகம், மாலை, 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில், புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியுடன், தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.திருவிழா கோலாகலம்ஆண்டு தோறும் உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக, இரு ஆண்டு இடைவெளிக்கு பின், நடப்பாண்டு திருவிழா நடப்பதால், பக்தர்கள் வருகை, மஞ்சள் நீர் தீர்த்தம் எடுத்து வருதல், பூவோடு எடுத்தல் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். தினமும், கோவில் வளாகம், குட்டைத்திடல் ஆகிய பகுதிகளில், ஆன்மிகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. தேர்த்திருவிழாவிற்கு, குட்டைத்திடலில், பிரமாண்ட ராட்டிணம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களுடன் பொருட்காட்சி நடந்து வருகிறது.மேலும், கோவில் வளாகம் துவங்கி, பிரதான ரோடுகள், குட்டை திடல் உள்ளிட்ட பகுதிகள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும், திருவிழா கடைகள் என களை கட்டியுள்ளது.
பக்தர்கள் வருகையால், கோவில் வளாகம், குட்டைத்திடல் மட்டுமின்றி, நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது.திருவிழாவுக்காக உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பக்தர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனால், உடுமலை பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பைபாஸ் ரோடு, புதுபஸ்ஸ்டாண்ட், திருப்பூர் ரோடு, கடைவீதி போன்ற முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.உடுமலை போலீசாரும், பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.