பதிவு செய்த நாள்
19
ஏப்
2022
02:04
கடலூர்: வண்டிப்பாளையம் கரையேற விட்ட குப்பத்தில் அப்பர் கரையேறிய ஐதீக நிகழ்ச்சி நடந்தது.
சைவ குறவர்களின் ஒருவரான அப்பர் என்கிற திருநாவுக்கரசர் சைவ சமயத்தின் சிறப்புகளை பாடி வந்தார். அதனை அறிந்த சமண சமயத்தைச் சேர்ந்த மகேந்திரவர்ம பல்லவ மன்னன் உத்தரவின் பேரில் திருநாவுக்கரசர் கல்லில் கட்டி கடலில் வீசப்பட்டார். அப்போது திருவாவுக்கரசர் ‘சொற்றுணை வேதியன்’ எனத் தொடக்கும் நமச்சிவாய பதிகத்தை ஓதியபடி கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலூர், வண்டிப்பாளையத்தில் கரையேறி, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளிவரும் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரரை வழிபட்டார். இந்த வரலாற்று பெருவிழா ஒவ்வொரு ஆண்டு சித்திரை மாத அனுஷ நட்சத்திரத்தன்று பாடலீஸ்வரர் கோவில் நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. சித்திரை மாத அனுஷ நட்சத்திரத்தையொட்டி அப்பர் கரையேறிய வரலாற்று பெருவிழா நடந்தது. அதனையொட்டி காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பாடலீஸ்வரர், பெரியநாயகி, அப்பர் உற்சவர்களுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் அப்பர் வெள்ளி விமானத்தி லும், பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் விமானத்திலும் ஊர்வலமாக வண்டிப்பாளையம் சென்றதும், அங்கு சுப்பரமணி சுவாமி கோவில் நிர்வாகத்தால் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கரையேறவிட்டக்குப்பத்தில், அப்பர் கரை யேறிய குளக்கரையில் எழுந்தருளினார். அங்கு ஓதுவார்கள் நமச்சிவாயம் பதிகத்தைப் பாட அப்பர் குளத்தில் 10 முறை தெப்பமடித்து கரையேறிய வரலாற்று பெருவிழா நடந்தது. தொடர்ந்து அப்பருக்கு சிறப்பு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர், சுப் ரமணிய சுவாமி மற்றும் விநாயகருடன் அப்பர் வீதியுலாவாக வந்து பழைய வண்டிப்பாளையத்தில் மண்டகப்படி நடைபெற்றது.