மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவில் தசாவதார நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஏப் 2022 02:04
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் தசாவதார நிகழ்ச்சியில் வீரஅழகர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது தினந்தோறும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதியுலா செல்வது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களின்போது தினந்தோறும் வீர அழகர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான எதிர்சேவை கடந்த 15ம் தேதியும்,ஏப்.16ம் தேதி வைகை ஆற்றில் வீர அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதனை தொடர்ந்து நேற்று இரவு கோர்ட்டார் மண்டகப்படியில் தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் வீரஅழகர் சுவாமி கிருஷ்ணர்,ராமர் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நாளை ஏப்.25ம் தேதி உற்சவ சாந்தியுடன் இந்தாண்டு சித்திரைத் திருவிழா நிறைவு பெறுகிறது.