கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் : ஏராளமானோர் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2022 03:04
உளுந்தூர்பேட்டை: கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 5ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது. 6ம் தேதி மாலை 4 மணிக்கு பந்தலடியில் தாலி கட்டுதல் நிகழ்ச்சியுடன் தினசரி இரவு சுவாமி வீதிஉலா நடந்தது. நேற்று திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பூசாரி கைகளால் தாலி கட்டிக் கொண்டு புத்தாடைகளை உடுத்தி கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று காலை 8 மணியளவில் அரவாண் சிரசுக்கு திருக்கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து கீரிமேடு கிராமத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புஜம், மார்பு, நத்தம் கிராமத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கை, கால்களை 21 அடி உயர தேரில் பொருத்தினர். சிவிலியன்குளம் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தேரினை கொண்டு தயார் செய்தனர். பின்னர் 15 அடி மற்றும் 20 அடி உயரம் மாலையை தேரில் சாற்றி பூக்களால் அலங்கரித்தனர். பின்னர் 8.30 மணியளவில் தீபாராதனையுடன் தேரோட்டம் துவங்கியது. இதில் திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். அப்போது கிராம மக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்களையும், சில்லரைக் காசுகளையும் சுவாமி மீது வீசி வழிபட்டனர். தேர் செல்லும் பாதையில் திருநங்கைகள் சூரத்தேங்காய்களை உடைத்து கற்பூரம் ஏற்றி கும்மியடித்து வழிபட்டனர். தேர் தொட்டி, நத்தம் வழியாக பந்தலடி சென்றடைந்தது. அங்கு திருநங்கைகள் பந்தலடியில் அழுகளம் நிகழ்ச்சியில் தாங்கள் அணிந்திருந்த தாலியை அறுத்தெறிந்து விதவை கோலம் பூண்டு ஒப்பாரி வைத்தனர். சிலர் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்தினர். பின் அப்பகுதியில் உள்ள கிணற்றில் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் குளித்து விட்டு தங்கள் ஊருக்கு திரும்ப தொடங்கினர். அப்பகுதியில் அதிகளவில் கடைகள் வைக்கப்பட்டிருந்ததால் தங்களுக்கு வேண்டிய பொருட்களை மக்கள் வாங்கிச் சென்றனர்.