பதிவு செய்த நாள்
20
ஏப்
2022
03:04
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்தில் தமிழக ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் தமிழகத்தில் இரண்டு சூரியன்கள் உள்ளதாக என பேசினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நேற்று ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதலில் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சென்றார். அவருக்கு மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் எஸ்பி. நிஷா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கோவிலுக்கு சென்ற ஆளுநர் ரவி கோபூஜை, கஜ பூஜை செய்து, சுவாமி, அம்பாள் மற்றும் காலசம்கார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு வந்த ஆளுநர் ரவியை பாஜக மாநில துணை தலைவர் முருகானந்தம் தலைமையிலானோர் தேசிய கொடி ஏந்தி வரவேற்றனர். தொடர்ந்து தருமபுரம் ஆதினம் சார்பில் பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்கப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் ரவி தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து ஆதீன மடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்துவைத்து ஆதீனம் குருமகாசன்னிதானம் முன்னிலையில் அங்கிருந்த பழங்கால ஓலைச்சுவடிகள், கலைப்பொருட்கள், மற்றும் இசைக்கருவிகளை பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் பவள விழா கலை அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார். அவருக்கு ஆதீனம் சார்பில் நடராஜர் உருவச்சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் பேசிய தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தருமபுரம் ஆதீனம் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 800 மாணவர்கள் பயிலும் முதல் பள்ளியாக உள்ளது. மேலும் தமிழ் கல்லூரியாக தொடங்கப்பட்ட கல்லூரி தற்போது கலைக்கல்லூரி ஆக வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழக ஆளுநரின் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன். தமிழகத்தை ஆளுகின்ற ஆட்சியாளரின் சின்னம் சூரியன். தமிழகத்தில் இரண்டு சூரியன்கள் உள்ளது தெய்வச்செயல். கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் தான் கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால் தான் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சீர்கெட்டுப் போய் உள்ளது. அதனால் கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து தமிழக ஆளுநர் ரவி அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் தொடங்கி பேசுகையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புனித இடத்திற்கு வர வாய்ப்பு அளித்த தருமபுரம் ஆதின குருமகா சந்நிதானத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இடத்திற்கு வந்த பின்னர்தான் நான் உண்மையான இந்தியன் என்ற உணர்வு ஏற்படுகிறது. குருமகாசன்னிதானம் சமயம் சார்ந்த பல்வேறு பணிகள் மட்டுமன்றி நாட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார். கொரோனா, பூகம்பம், கார்கில் போர் போன்ற சமயங்களில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நிறைய உதவிகளை செய்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 2047 இல் இந்தியா வளர்ச்சியான பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல் ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சியிலும் முதலிடம் வகிக்கும். உலகில் உள்ள மக்கள் இயற்கை இடர்பாடு, ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அனுதினமும் சந்தித்து வருகிறார்கள். நாகரீகம், கலாச்சாரம், கல்வி, நீதி போதனைகள் பண்பாடு ஆகியவற்றால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும். இந்தியாவில் எல்லோருக்கும் ஒரே கடவுள் சிவன். மதத்தால், மொழியால், உணர்வால் இந்தியர்கள் பிரிந்து இருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம். இந்தியாவுடைய ஆன்மிகம் தமிழகத்திலிருந்து தொடங்கப்பட்டது. அனைவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து தெலுங்கானாவில் நடைபெறும் புஷ்கரம் விழாவிற்கு தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மேற்கொள்ளும் ஞான ரத யாத்திரையை ஆளுநர் ரவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆளுநர் வருகையையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் திருச்சி சரக ஐஜி. பாலகிருஷ்ணன், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, திருச்சி சரக டிஐஜி சரவணா சுந்தர் மற்றும் 5s பிக்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.