பதிவு செய்த நாள்
21
ஏப்
2022
08:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நடந்த கூத்தாண்டவர் விழா தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த வேடந்தவாடி கிராம மக்கள், அரவானின் வடிவமான கூத்தாண்டவரை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இந்தாண்டு, 125வது சித்திரை திருவிழா கடந்த, 1ல் மஹாபாரத சொற்பொழிவுடன் தொடங்கியது. கடந்த, 10ல் பாஞ்சாலி திருமண விழா, 11ல் கூத்தாண்டவர் பிறப்பு நிகழ்ச்சி நடந்தன. இதை காண சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர். கடந்த, 18ல் திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடந்தது. சென்னையை சேர்ந்த வித்திவிக்கா முதலிடம் பிடித்தார். தொடர்ந்து, கூத்தாண்டவர் கோவில் முன், பூசாரி கையால் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்வு நடந்தது. நேற்று கூத்தாண்டவர் தேரோட்டம் நடந்தது. இதில், விநாயகர், கூத்தாண்டவர், காமாட்சி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்பட்டு, தனித்தனி தேரில் அலங்கரித்து தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, திருநங்கைகளின் தாலிகளை அறுத்து ஒப்பாரி வைக்கும் நிகழ்வும், கூத்தாண்டவருக்கு பட்டாபிஷேக நிகழ்வும் நடந்தன.