பதிவு செய்த நாள்
23
ஏப்
2022
01:04
பந்தலூர்: பகவதி அம்மன் கோவில்களில் களைகட்டும் "வெடி வழிபாடு"
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மலையாள மொழிபேசும் வயநாடன் செட்டி சமுதாய மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இந்தப் பகுதியில் பல தலைமுறைகளை கடந்த கோவில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். கிராமத்தை ஒட்டிய வனங்களுக்கு நடுவே, உள்ள பகவதி அம்மன் கோவில்கள், மக்களைப் பாதுகாக்கும் காவல் தெய்வமாக உள்ளது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் விஷு பண்டிகை கொண்டாடும் காலத்தில் இந்தக் கோவில்களில், திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் செண்டை மேளம் மற்றும் வாளுடன் அருள் வாக்கு கூறுதல் சிறப்பு அம்சமாக இடம் பெறும். அதிலும் குறிப்பாக "வெடி வழிபாடு" முக்கிய இடம் வகிக்கிறது. புற்று மண், அடுப்புக்கரி, ஓடுத் துகள் இவற்றை தூளாக்கி, சிறு துளையுடன் தயார் நிலையில் அதற்காக தயார்படுத்தப்பட்ட கற்களில், மேற்கண்ட துகள்களை ஒன்றாகக் கொட்டி, இடிக்கப்படுகிறது. பின்னர் நேற்றிகடன் உள்ளவர்கள், அதற்கான சிறு கட்டணத்தை கோவில் கமிட்டியிடம் செலுத்தினால் அவர்கள் பெயரில், இதன் மேல் பகுதியில் ஊதுபத்தி மூலம் சிறு வெப்பத்தை காட்டினால் சத்தத்துடன் வெடிக்கும். ஆனால் கற்கள் எந்த பாதிப்பும் ஏற்படாததுடன், சுற்றுச்சூழலுக்கும் அருகிலுள்ள மக்களுக்கும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. மீண்டும் அதே கற்களில் துகள்களை நிறைத்து தொடர்ச்சியாக வெடி வழிபாடு நடத்தப்படுகிறது. மக்கள் மத்தியில் உள்ள பயத்தைப் போக்கவும், பழங்காலத்தில் வனத்திற்கு மத்தியில், திருவிழா நடப்பதை வெளிக்காட்டவும் இதுபோன்ற வெடி வழிபாடு நடத்தப் படுவதாக மூத்தோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சிறப்பு வழிபாடு இந்த கோவில்களில் மட்டுமே உள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.