பதிவு செய்த நாள்
23
ஏப்
2022
06:04
இன்று எங்கும் இந்த காட்சிகளை பார்க்க முடியும். மருத்துவமனைக்குள் வரிசை வரிசையாக கிடக்கும் நாற்காலிகளில் சுருண்டுகொண்டு, கையில் சீட்டோடு காத்திருக்கும் கூட்டம். டாக்டர் அடுத்து என்ன சொல்வாரோ என்று ஒரு புறம் யோசிக்க, மறுபுறம் இதற்கெல்லாம் நம்மிடம் பணம் இல்லையே என்ற ஏக்கம் மறுபுறம். இப்படி உட்கார்ந்து இருப்பவர்களா நீங்கள்... உடனே சென்னை அண்ணாநகர் சந்திர மவுலீஸ்வரர் கோயிலுக்கு கிளம்பி வாருங்கள். சந்திர மவுலீஸ்வரரை டாக்டருக்கு எல்லாம் பெரிய டாக்டர் என்றே சொல்லலாம்.
தற்போது அண்ணாநகர் என்று அழைக்கப்படும் இந்த ஊர் முன்பொரு காலத்தில் திருமங்கலம் என்ற பெயரில் இருந்தது. அப்போது ஒருபுறமாக சாய்ந்து மண்ணுள் புதைந்திருந்த, ஒரு லிங்கத்தை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அதை ‘பாலீசுவரர்’ என்ற பெயரில் வணங்கி வந்தனர்.
இங்கே மற்றொரு மகானின் பெருமையை சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் இந்த கோயில் உருவாக அடித்தளம் இட்டவரே அவர்தான். பொதுவாகவே மக்களுக்கு துன்பம் ஏற்படும் வேளைகளில் கடவுளின் அம்சமாக சில மகான்கள் விண்ணிருந்து பூமிக்கு வருவது உண்டு. அந்த வரிசையில் முதல் நபராக இருப்பவர்தான் காஞ்சி மஹாபெரியவர். நடமாடும் தெய்வமாக எல்லோராலும் போற்றி வணங்கப்படும் இவரை தரிசனம் செய்ய, 1970ல் இந்த ஊர் மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது பாலீசுவரருக்கு ‘சந்திர மவுலீஸ்வரர்’ என பெயரை சூட்டினார். கூடவே திரிபுர சுந்தரி என அம்பாள் சன்னதியை அமைக்கவும் வழிகாட்டினார் அந்த மகான். இப்படி அந்த உயர்ந்த மகானின் வழிகாட்டுதலால் அமைந்த இந்த கோயில், சிறப்பின் பிறப்பிடமாகத்தானே இருக்கும்.
பிறகு நவகிரகம், வரசித்தி விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கல்யாண சுப்ரமணியர், ஆஞ்சநேயர், கால பைரவர் சன்னதி ஆகியவை 1996ல் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிேஷகம் நடைபெற்றது.
சரி. வாருங்கள் இனி கோயிலை சுற்றிப்பார்க்கலாம். தெற்கு நோக்கியிருக்கும் 5 நிலை கொண்ட ராஜகோபுரத்தை தரிசனம் செய்தவுடன் வரசித்தி விநாயகரிடம் நமது வருகையை தெரிவிக்கலாம். பின் கிழக்கு நோக்கி இருக்கும் சந்திர மவுலீஸ்வரரின் அழகை காண நமக்கு இரண்டு கண்கள் போதாது என்றே சொல்லலாம். அவரை தரிசனம் செய்து முடித்தவுடனேயே கோயிலின் பேரழகியான திரிபுர சுந்தரியை காணும் பாக்கியத்தை பெறலாம்.
என்னடா.. இது கோயிலைத்தான் சுற்றி பார்க்கிறோமே. நாம் தேடி வந்த உடல் ஆரோக்கியம் இங்கு யார் தருவார் என்று யோசிக்காதீர்கள். மிருத்யுஞ்ஜயனாக இருக்கும் சந்திர மவுலீஸ்வரரால் மட்டுமே அதை கொடுக்க முடியும். மிருத்யு என்றால் எமனை ஜெயிப்பது என்று பொருள். இப்படி சிவபெருமானின் ஆசியை பெற யாகம் ஒன்றை நடத்துவதுண்டு. அதற்கு மிருத்யுஞ்ஜய ஜபம் என்று பெயர். இது இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டால் உடல்நலம் சிறக்கும். மனதில் தைரியம் பிறக்கும்.
எப்படி செல்வது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ.,