மணமாகாதவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம், பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் கிடைக்க வேண்டுமா... திருவனந்தபுரம் நடராஜர் கோயிலுக்கு ஒருமுறை வாருங்கள். இவரை தட்சிணாமூர்த்தியாக கருதுவதால் வியாழக்கிழமையில் கொண்டைக்கடலை மாலை சாற்றுகின்றனர். திருவனந்தபுரத்தை ஆட்சி செய்த மூலம்திருநாள் மகாராஜா காலத்தில் பத்மநாப சுவாமி கோயில் பூஜைக்காக இங்கு நந்தவனம் அமைக்கப்பட்டது. அந்த இடத்தில் பழமையான நடராஜர் கோயில் ஒன்று இருந்தது. ஆனால் வழிபாடு ஏதும் நடக்கவில்லை. நாளடைவில் நந்தவனத்தைச் சுற்றி குடியிருப்பு உருவானது. குடியிருப்போருக்கு அன்றாட வாழ்வில் சோதனைகள், நெருக்கடிகள் குறுக்கிட்டன. தேவ பிரசன்னம் பார்த்த போது நடராஜருக்கு வழிபாடு நடக்காததும், கோயிலுக்கு எதிரிலுள்ள முத்தாரம்மனின் உக்ர பார்வையும், கோயிலுக்குள் அம்மன் சன்னதியை உருவாக்கினால் பிரச்னை தீரும் என்றும் அறிந்தனர். அதன்படி கோயிலில் அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். கல்வியில் மேம்பட நடராஜரை வழிபடுகின்றனர். தினமும் மஞ்சச்சோறு (பொங்கல்), பஞ்சாமிர்த நைவேத்யம், ஆருத்ரா தரிசனத்தன்று களியும் படைக்கின்றனர். தாரா பாத்திரத்தில் புனித நீர் ஊற்றி குளிர்விக்கும் ஜலதாரை வழிபாடு இங்குண்டு. இதைச் செய்வதால் நோய் நீங்கி எமபயம் விலகும். எப்படி செல்வது * திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது வாசல் (டெர்மினல்) கேட் எதிரிலுள்ள பவர் ஹவுஸ் சாலையில் உள்ளது. * தம்பானுார் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஒரு கி.மீ., விசேஷ நாட்கள்: கார்த்திகை சோமவாரம், மார்கழி திருவாதிரை, மகாசிவராத்திரி, நேரம்: காலை 5.30 – 9:00 மணி, மாலை 5:30 – 8.30 மணி.