காசிவிசுவநாதர் அம்மன் சன்னதி முன் வாயில் திறக்கப்பட வேண்டும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2012 11:07
தென்காசி: தென்காசி காசிவிசுவநாதர் கோயில் அம்மன் சன்னதி முன் வாயில் திறக்கப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசியில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்ட உலகம்மன் காசிவிசுவநாதர் கோயில் பழைமையும், பெருமையும் வாய்ந்தது. இக்கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடப்பது வழக்கம். மாதந்தோறும் திருவிளக்கு பூஜை நடக்கிறது. இக்கோயிலில் காசிவிசுவநாதர், பாலமுருகன், உலகம்மன் சன்னதிகளும், பரிவார தெய்வங்களுக்கு சிறிய அளவிலான தனி சன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர். குற்றாலம் சீசன் காலத்திலும், ஐயப்ப சீசன் காலத்திலும் காசிவிசுவநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். காசிவிசுவநாதர் கோயிலுக்கு சொந்தமான பல கடைகள் தனி நபர்களிடம் சிக்கி வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. ராஜகோபுரம் வாயில் வழியே பக்தர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வருகின்றனர். பக்தர்கள் கோயிலில் தரிசனம் முடிந்ததும் வெளியே செல்வதற்கு அம்மன் சன்னதி முன்பு அமைக்கப்பட்டுள்ள வாயிலை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அம்மன் சன்னதி முன் வாயில் மூடப்பட்டுள்ளது. இந்த வாயிலை திறந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தாலும் இந்து சமய அறநிலையத்துறை மவுனம் சாதித்தே வருகிறது. இதனால் அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதி பாழடைந்து வருவதால் இப்பகுதியின் உறுதிதன்மை கேள்விக்குறியாகியுள்ளது. அம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியை பக்தர்களின் வசதிக்காக திறக்கவும், அப்பகுதியை முறையாக பராமரிக்கவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக சட்டசபை மனுக்கள் குழுவினர் இன்று (26ம் தேதி) குற்றாலம் வந்து ஆய்வு கூட்டம் நடத்துகின்றனர். தென்காசி காசிவிசுவநாதர் கோயில் பிரச்னையையும் ஒரு கோரிக்கை மனுவாக நினைத்து சட்டசபை மனுக்கள் குழு பரிசீலனை செய்து உலகம்மன் சன்னதி நுழைவு வாயில் பகுதியை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிவனடியார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.