பதிவு செய்த நாள்
29
ஏப்
2022
05:04
அவிநாசி: அவிநாசி, சின்னக்கருணைபாளையம் மக்கள், மண் குதிரைகள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் சித்திரை தேர்த்திருவிழா, வரும், 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, அவிநாசி அருகே சின்னக்கருணைபாளையம் பொதுமக்கள், கவுண்டம்பாளையத்தில் களிமண்ணினால் செய்யப்பட்ட, 2 மண் குதிரைகளை மலர்களால் அலங்கரித்து, பூஜை செய்து ஆகாசாராயர் கோவிலுக்கு சுமந்து வந்தனர். இதில் பங்கேற்ற பக்தர்கள் கோவையிலிருந்து விரதமிருந்து. தாரை, தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து கவுண்டம்பாளையத்தில் இருந்து சின்னக்கருணைபாளையம், பெரிய கருணைபாளையம் வழியாக கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சுமார், 5 கி.மீ., தூரம் மண் குதிரை சுமந்து, ஆகாசராயர் கோவிலை வந்தடைந்தனர். வழிநெடுகிலும் இருந்த மக்கள். ரோடுகளில் தண்ணீர் ஊற்றியும், பக்தர்களுக்கு ஆங்காங்கே குடிநீர், நீர்மோர், குளிர்பானம் வழங்கியும், அவர்களுக்கு வெயிலின் சுடுதலை சமாளிக்க உதவினர். பின், ஆகாசராயருக்கு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது; பொங்கல் வைத்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நேர்த்திக்கடன் செலுத்தினர்.