கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி கோயிலில் 125 திருப்பணிகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2022 08:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 125 திருப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க மே 2வது வாரம் மாநில குழு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக முக்குறுணி விநாயகர் சன்னதி, நால்வர் சன்னதி, வன்னி விநாயகர் சன்னதி, மடப்பள்ளி உள்ளிட்ட 5 திருப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். 2018 பிப்.,2 கோயில் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் நடத்த முடியவில்லை. நீண்ட இழுபறிக்கு பின் இம்மண்டபத்தை சீரமைக்க சமீபத்தில் திருப்பூர் ஸ்தபதி வேல்முருகனுக்கு ஒப்புதலளிக்கப்பட்டது இதற்கிடையில் கும்பாபிஷேகம் 2 ஆண்டுகளுக்குள் நடத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஒரு புறம் அதற்கான திருப்பணிகளும், மறுபுறம் வீரவசந்தராய மண்டப சீரமைப்பு பணிகளும் நடக்கவுள்ளது. ஸ்தபதி வேல்முருகன் பணிகளை துவங்க நாள், நட்சத்திரம் அடிப்படையில் 3 தேதிகளை கோயில் நிர்வாகத்திடம் கொடுத்துள்ளார். பட்டர்களிடம் ஆலோசித்து தேதி முடிவு செய்யப்படவுள்ளது.
நேற்று (ஏப்.,28) சென்னையில் நடந்த திருப்பணிகள் ஒப்புதல் குழுக்கூட்டத்தில் மீனாட்சி கோயிலின் முக்குறுணி விநாயகர் சன்னதி, நால்வர் சன்னதி, வன்னி விநாயகர் சன்னதி, மடப்பள்ளி உட்பட 5 திருப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 125 திருப்பணிகளுக்கு ஒப்புதல் அளிக்க மே 2வது வாரம் மாநில குழு ஆய்வு செய்ய உள்ளது. முதற்கட்டமாக திருப்பணிகள் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படும்.