பதிவு செய்த நாள்
30
ஏப்
2022
12:04
வாலாஜாபாத்: கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில், விரைவு தரிசனம் மற்றும் பிற தரிசனங்களுக்கு, மின்னணு டிக்கெட் வழங்கும் நடைமுறை, துவங்கி உள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், குரு கோவில் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோவில் உள்ளது. இக்கோவிலில், தரிசனம் மற்றும் விரைவு தரிசனத்திற்கு அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளை, ஊழியர்கள் வழங்கி வந்தனர் இந்நிலையில், தரிசனம் மற்றும் விரைவு தரிசனங்களுக்கு, மின்னணு கருவி வாயிலாக டிக்கெட் வழங்கும் பணியை, அறநிலையத் துறையினர் துவக்கி உள்ளனர்.கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி கோவிலில், மின்னணு டிக்கெட் வழங்கும் நடைமுறை, நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, கட்டணம் வசூலிக்கவும் மின்னணு கருவி பயன்படுத்தப்படுகிறது.இது குறித்து, பெயர் வெளியிடாத கோவில் அலுவலர் ஒருவர் கூறியதாவது: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி, கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு, மின்னணு கருவி வாயிலாக கட்டணம் வசூலித்து வருகிறோம்.அதேபோல் தரிசனம், நெய்தீபம், சிறப்பு அபிஷேகம், விரைவு தரிசனம் ஆகியவற்றிற்கும் மின்னணு டிக்கெட் வழங்கி வருகிறோம். இதற்கு, கணினி மற்றும் மின்னணு டிக்கெட் வழங்கும் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.