பதிவு செய்த நாள்
02
மே
2022
01:05
கேரளாவிலுள்ள திருச்சூர் அருகே இரிஞ்ஞாலக்குடாவில் ராமபிரானின் தம்பியான பரதனுக்கு கோயில் உள்ளது. காட்டுக்குச் சென்ற ராமரை பதினான்கு ஆண்டுகள் கழித்து சந்தித்த பரதனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை இங்கு சுவாமியின் முகத்தில் காணலாம். இவரை வழிபட்டால் குடும்ப, சகோதர ஒற்றுமை பலப்படும். இங்கு சித்திரை பிரம்மோற்ஸவம் மே12 முதல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஒருமுறை விஷ்ணு பக்தரான ‘வாக்கை கைமாள்’ என்பவருக்கு மலபார் கடற்கரையில் குறிப்பிட்ட இடத்தில் சுவாமி சிலைகள் இருப்பதாக கனவு ஏற்பட்டது. அங்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் பட்டு ஜொலித்தபடி நான்கு சிலைகள் கிடைத்தன. ராம சகோதரர்களான அச்சிலைகள், துவாபர யுகத்தில் பகவான் கிருஷ்ணரால் துவாரகையில் பூஜை செய்யப்பட்டவை. கடலுக்குள் துவாரகை நகரம் மூழ்கிய போது இச்சிலைகள் அரபிக்கடலில் அடித்து வரப்பட்டு கேரளாவை வந்தடைந்தது. இதில் ராமருக்கு திர்பிறையாறு, பரதருக்கு இரிஞ்ஞாலக்குடா, சத்ருகனருக்கு மூளிக்குளம், லட்சுமணருக்கு பாயம்மல் ஆகிய இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன. 15 கி.மீ., சுற்றளவில் உள்ள இக்கோயில்களை ‘ராமாயண மாதம்’ என்னும் ஆடியில் தரிசித்தால் புண்ணியம் உண்டாகும்.
‘கூடல் மாணிக்கப் பெருமாள்’ என்றும், ‘சங்கமேசன்’ என்றும் இங்குள்ள பரதன் அழைக்கப்படுகிறார். பல நுாற்றாண்டுக்கு முன் இங்கு திருப்பணி செய்த போது சுவாமியின் நெற்றியில் அபூர்வ ஒளி தோன்றியது. பார்ப்பதற்கு மாணிக்க கல்லின் ஒளி போல இருந்தது. காயங்குளத்தை ஆட்சி செய்த மன்னரிடம் இருந்த மாணிக்கக் கல்லை இந்த ஒளியுடன் ஒப்பிட்ட போது இரண்டும் ஒன்றாக இருப்பதைக் கண்டனர். இதனால் ‘மாணிக்கப்பெருமாள்’ என்றும் சுவாமிக்கு பெயர் ஏற்பட்டது.
திருமணம் தடையின்றி நடக்கவும், ஐஸ்வர்யம் பெருகவும் சுவாமிக்கு 101 தாமரைப் பூக்களால் ஆன மாலை அணிவிக்கின்றனர். விருப்பம் நிறைவேற களபாபிேஷகம் என்னும் பெயரில் சந்தனக்கலவை சாத்துகின்றனர். கத்தரிக்காய் நைவேத்யம் செய்ய வயிற்று கோளாறுகள் மறையும்.
இக்கோயிலில் மே 12 – 22 வரை சித்திரை பிரம்மோற்ஸவம் நடக்கிறது. இதில் தினந்தோறும் 17 யானைகளுடன் சுவாமி எழுந்தருள்வார். அப்போது தங்கத்தால் ஆன நெற்றிப்பட்டம், ஆலவட்டம், வெண்சாமரத்தால் யானைகள் அலங்கரிக்கப்படும். நுாற்றுக்கணக்கான வாத்திய கலைஞர்கள் செண்டை மேளம் இசைப்பர். இரவில் ராமாயண நிகழ்வுகளை கதைகளி நடனமாக கலைஞர்கள் நிகழ்த்துவர்.
எப்படி செல்வது?
* திருச்சூரில் இருந்து 23 கி.மீ.,
* சாலக்குடியில் இருந்து 19 கி.மீ.,
* கொடுங்கல்லுாரில் இருந்து 16 கி.மீ.