ராமேஸ்வரம் கோயிலில் முருகன் சிலை சேதம் : பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2022 10:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பழமையான முருகன் சிலை உடைந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ராமாயணம் வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் 11ம் நூற்றாண்டில் உருவானது. இங்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் புனித நீராடி தரிசிக்கின்றனர். இந்நிலையில் கோயில் சுவாமி சன்னதி அருகில் பீடத்துடன் 3 அடி உயரத்தில் பழமையான சுவாமி முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் உள்ளது. கருங்கல்லில் வடிவமைத்துள்ள சிலைகளில் 3 நாள்களுக்கு முன்பு முருகன் சிலையின் வலது கை உடைந்து விழுந்தது. பழமையான முருகன் சிலையின் கை உடைந்த சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவாமியை தரிசிக்க பக்தர்கள் கூட்டமாக சன்னதிக்கு முன் திரண்டனர். அப்போது நெரிசலில் ஒரு பக்தர் முருகன் சிலை மீது விழுந்ததால், கை உடைந்து இருக்ககூடும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். இச்சிலையை அகற்றி புதிய சிலையை பிரதிஷ்டை செய்ய ஹிந்து அறநிலையத்துறை ஆணையருக்கு தகவல் தெரிவித்து உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.