பஞ்சபாண்டவர் மலைக்கு பாதையில்லை: பரிதவிப்பில் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2022 08:05
மேலூர்: கீழவளவில் வரலாற்று சிறப்பு மிக்க தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சபாண்டவர் மலைக்கு செல்வதற்கு பாதை இல்லாததால் பக்தர்கள் மற்றும் மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி.
கி.பி., 2 – 11 ம் நுாற்றாண்டு வரை சமனர்கள் வழிபாட்டு தலமாக இம் மலை இருந்தது. இம் மலையில் மூன்று தீர்த்தங்கரர் உருவங்களும், குகை தளத்தில் ஆறு தீர்த்தங்கரர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளது. தவிர பிராமிய கல்வெட்டுக்கள், கல் படிக்கட்டுகளும், மலையடிவாரத்தில் விநாயகர், முருகன் கோயில்கள் உள்ளது. இக் கோயில்களில் கீழவளவு பகுதி மக்கள் திருமணம் செய்வது வழக்கம்.வரலாற்று சிறப்புமிக்க புராதன சின்னங்கள் நிறைந்த இம் மலையை தொல்லியல் துறையினர் பெயரளவில் பராமரித்து வருவதால் சிலைகள் சிதைய ஆரம்பித்துள்ளது. கீழவளவு செந்தில்குமார் கூறுகையில் – மெயின் ரோட்டில் இருந்து மலைக்கு செல்ல 300 மீட்டர் துாரம் பாதை கிடையாது. தனியார் பட்டா இடத்தின் வழியாக செல்கிறோம். தனியார் இடமாக உள்ளதால் ஊராட்சி சார்பில் ரோடு போட முடியாமல் பாதைகள் மேடு பள்ளமாகவும், சேறும், சகதியுமாக உள்ளது. அதனால் ஆராய்ச்சி செய்வதற்காக வெளிநாடு, மாநில மற்றும் மாவட்டங்களை சேர்ந்த வரலாற்று துறை மாணவர்கள் மற்றும் திருமணங்களுக்கு வருபவர்கள் மலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம். பாதை அமைக்க கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றார். தாசில்தார் இளமுருகன் கூறுகையில் – பாதை குறித்து நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.