பதிவு செய்த நாள்
06
மே
2022
06:05
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது. வைணவ ஆச்சாரியர்களில் முக்கியமானவர் ராமானுஜர். இவரது, 1005 வது ஜெயந்தி விழா, காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்தது. காலை, 5:30 மணிக்கு மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜை ஆகியவை நடந்தது. அதை அடுத்து ராமானுஜர் சன்னதியில் புண்ணியா வசனம், கலச ஆவாஹனம், மூலவர், உற்சவருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது.
பின்பு வெண்பட்டு குடையுடன் வெள்ளி சப்பரத்தில், ரங்க மண்டபத்தில் அரங்கநாத பெருமாள் முன்பு, ராமானுஜர் எழுந்தருளினார். அங்கு அவருக்கு பரிவட்டமும், சடாரி மரியாதையும் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேத வியாச பட்டர் ஆகியோர் திவ்ய பிரபந்தத்தில் ராமானுஜ நூற்று அந்தாதி பாசுரங்களை செய்வித்தனர். பின்பு ராமானுஜருக்கு மாலை மரியாதை செய்யப்பட்டது. கோவில் வளாகத்தில் சப்பரத்தில் ஊர்வலம் வந்து சன்னதியை அடைந்தார். பிறகு சாற்று முறை செபித்த பின்பு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், மிராசுதாரர்கள், அர்ச்சகர்கள் சுரேஷ் நாராயணன், திருவேங்கடம், ஹரி, ராஜா சீனிவாசன் ஆகியோர் இந்த வைபவ நிகழ்ச்சியை நடத்தினர். இதேபோன்று காரமடை, மேட்டுப்பாளையம், தாசம்பாளையம், பெள்ளாதி, சின்ன தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ராமானுஜர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.