கண்ணகி கோயிலிற்கு பாதை : தமிழக அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2022 06:05
கம்பம்: கண்ணகி கோயிலிற்கு பளியன்குடி வனப்பகுதி வழியாக பாதை அமைக்க ஆய்வு செய்ய ஹிந்து சமய அறநிலையதுறை மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு தேசிய செட்டியார்கள் பேரவை வரவேற்பு தெரிவித்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மதுரையை எரித்த கண்ணகி காடுகள் வழியாக நடந்து வந்து தற்போது கோயில் உள்ள இடத்திலிருந்து விண்ணேறினாள் என்று கூறப்படுகிறது. கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு செல்ல குமுளி தேக்கடி வழியாக பெரும்பாலனவர்கள் செல்கின்றனர்,கேரள அதிகாரிகள் ஆண்டுதோறும் கெடுபிடி செய்வதால், தமிழகத்தில் பளியன்குடி வனப்பகுதி வழியாக பாதை அமைக்க நீண்டகாலமாக கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் சட்டசபையில் ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் கண்ணகி கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு பாதை அமைக்க ஆய்வு பணிக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கம்பம் பகுதியில் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தேசிய செட்டியார்கள் பேரவை சார்பில் ஏப்.30 ல் தேனி வந்த முதல்வரிடம் கண்ணகி கோயிலிற்கு கும்பாபிஷேகம் செய்ய வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில், ". கண்ணகி கோயிலிற்கு பளியன்குடி வழியாக பாதை அமைக்க ஆய்வு செய்ய நிதி ஒதுக்கிய தமிழக அரசின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. நீண்டகாலமாக இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். விரைவில் ஆய்வை முடித்து பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.