பதிவு செய்த நாள்
30
ஜூலை
2012
10:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் 17ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை, 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3 முதல் 4 மணி வரை ஸ்படிக லிங்க பூஜை நடந்தது. பின் சுவாமி, அம்பாளுக்கு வழக்கமான கால பூஜைகள் நடந்து, 6 மணிக்கு மேல் தங்கக் கேடயத்தில் ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்சமூர்த்திகளுடன் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றதைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்கு தீபாராதனை முடிந்து சுவாமி, அம்பாள் கோவிலுக்கு புறப்பாடாகியது.இதையொட்டி நேற்று அதிகாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் தீர்த்தமாடவும் அனுமதிக்கப்படவில்லை. இரவு 9 மணிக்கு மேல் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் நான்கு ரத வீதியில் உலா வந்து கோவிலை வந்தடைந்தவுடன், மூலவருக்கு அர்த்தஜாம பூஜை, பள்ளியறை பூஜை நடந்தது.