மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், விரிசலைடந்த தூண்களுக்கு பதில், ரூ.,4 கோடியில் புதிய தூண்கள் அமைக்கும் பணி நடக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன கோயில்களை சீரமைக்க, அரசின் 13 வது நிதிக்குழு நிதி ஒதுக்கியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கருங்கல் தூண்களில் விரிசல் ஏற்பட்டு, பலமிழந்துள்ளன. முதற்கட்டமாக பொற்றாமரைக்குளம் தென்பகுதியில் விரிசலடைந்த தூண்களை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.பெங்களூரூ பகுதி கல்குவாரியில் புவியியல் மற்றும் ஐ.ஐ.டி.,பேராசிரியர்கள், அரசு தலைமை ஸ்தபதி ஆய்வு செய்தனர். அக்குவாரி கற்கள் தரமானவை என முடிவு செய்தனர். அங்கிருந்து மதுரைக்கு கற்கள் கொண்டு வரப்பட்டது.தற்போதுள்ள தூண்களைப்போல் பழமை மாறாமல், ஆகம விதிப்படி புதிய கற்களை வடிவமைத்து பொருத்தும் பணி நடக்கிறது. உத்திரங்கள், பாவு கற்களையும் அகற்றி புதிய கற்கள் பொருத்தப்படும். இப்பணி ஓராண்டிற்குள் முடியும். ரூ.4 கோடியில் மேற்கொள்ளப்படும் பணிக்கு, தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியது. ரூ.3 கோடி மீனாட்சி அம்மன் கோயில் நிதியில் செலவிடப்படும்.