பதிவு செய்த நாள்
10
மே
2022
01:05
புதுக்கடை: கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி திருக்கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
ஒன்பதாம் திருவிழாவான நேற்று காலை மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஏந்தி பக்தர்களின் காவடி ஊர்வலம் நடந்தது. இதில், 3 அலங்கார யானைகள், முத்துக்குடை , தாலப்பொலி, முளைப்பாரி, பறக்கும் காவடி, வேல் காவடி, பூக்காவடி, பால்குடம், சந்தனம், நல்லெ ண்ணெய் காவடிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வெட்டுவெந்நி, காப்புக்காடு, முன்சிறை, புதுக்கடை வழியாக தேவஸ்தானத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து, அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், பாலமுருகனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகமும், குதியோட்டம், பூமாலை , கை விளக்கு, பிடிப்பணம் உள்ளிட்ட நேர்ச்சைகள், பிற்பகல் அம்மன் வட வீதி பவனி, இரவு அம்சிநல்லதம்பி தலைமையில் சமய மாநாடு, கலை நிகழ்ச்சி, நள்ளிரவு பள்ளி வேட்டை நடந்தது. இன்று (10-ம் தேதி) காலை பக்தி இன்னிசையை தொடர்ந்து அம்மன்பவனி, மாலை 3 யானைகள் மீது அம்மன் தென்வீதி ஆறாட்டு, இரவு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சிவகுமார் தலைமையில் சமய மாநாடு, நள்ளிரவு 12 மணிக்கு திருக்கொடி இறக்கம், வாண வேடிக்கை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் தலைவர்குமார், செயலாளர் சந்திரகுமார், பொருளாளர் சவுந்தரராஜன், துணைத்தலைவர் முருகன், இணைச்செயலாளர் துளசிதாஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.