பதிவு செய்த நாள்
11
மே
2022
04:05
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பாக்குக்கார வீதியில் உள்ள, மாகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்தது.
கடந்த மாதம், 26ம் தேதி இக்கோவிலில் பூச்சாட்டுதலுடன், குண்டம் விழா துவங்கியது. குத்துவிளக்கு பூஜையை தொடர்ந்து அக்னி கம்பம் நடப்பட்டது. பின்பு பேட்டை மகா மாரியம்மன் கோவிலில் இருந்து, தீர்த்த குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று இரவு, குண்டம் திறந்து அக்னி வளர்க்கப்பட்டது. இன்று காலை பவானி ஆற்றிலிருந்து, அலங்காரம் செய்த அம்மன் சுவாமியை, கோவிலுக்கு அழைத்து வந்தனர். 8:00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. கோயில் தலைமை பூசாரி தட்சிணாமூர்த்தி குண்டத்தை வலம் வந்து, பூப்பந்து மற்றும் எலுமிச்சம் பழத்தை உருட்டி விட்டு, முதலில் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து சுதர்சன் சக்தி கரகம், மனோஜ் சிவன் கரகம், சுரேஷ் கோலக்கூடை ஆகியவற்றை எடுத்துக் கொண்டு குண்டம் இறங்கினர். அதைத் தொடர்ந்து ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி நேர்த்திக் கடனை செலுத்தினர். விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் நாச்சிமுத்து, தர்மகர்த்தா தயாநிதி, செயலாளர் தேவகுமார், பொருளாளர் வெள்ளிங்கிரி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.