பதிவு செய்த நாள்
13
மே
2022
08:05
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்ட கோவில்களில் திருப்பணிகள், திருமண மண்டபம், அன்னதானக் கூடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தலமான மால்லபுரத்தில், பயணியர் வருகையை அதிகரிக்க எடுக்கப்பட்ட இந்நடவடிக்கையால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், ஒருபுறம் சரித்திரம், மற்றொரு புறம் ஆன்மிகம் என சிறப்பு பெற்றது.பல்லவர், சோழர், விஜயநகரர் என, வெவ்வேறு அரசர்கள், இப்பகுதியில் ஆட்சி புரிந்துள்ளனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட அவர்கள் சைவ, வைணவ சமய கோவில்களை ஏராளமாக அமைத்துள்ளனர். அரசர்கள், கோவிலை வழிபாட்டு இடமாக மட்டுமே கருதாமல், தங்கள் ஆளுகை பகுதிகளை, கோவிலிலிருந்தே நிர்வகித்தது குறிப்பிடத்தக்கது.கவனம்எனவே, கோவிலில் தினசரி வழிபாடு, பிற சேவைகள் தங்கு தடையின்றி நடைபெற, விவசாய நிலம், பொன், மற்றவை தானம் அளித்தனர். வழிபாடும் சிறந்து விளங்கி, ஆன்மிகம் மென்மேலும் தழைத்தது. அதேபோல் இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் சிற்பங்கள், மகிஷாசுரமர்த்தினி குடைவரை மண்டபங்கள் உள்ளிட்ட கலை சிற்பங்களை காண, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
உலக அளவில் புகழ்பெற்றதால், மாமல்லபுரத்தை சுற்றுலா தரத்திற்கு ஏற்ப மேம்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் கவனம் செலுத்துகின்றன.சுற்றுலா பயணியர் வருகைக்காக, மாமல்லபுரத்தில் குடிநீர், நடைபாதை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சுற்றுலாவை மேலும் மேம்படுத்த, இப்பகுதிகளில் உள்ள முக்கிய கோவில்களையும் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.அதன்படி, இங்குள்ள ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அனைத்து சன்னிதிகளின் கோபுரங்கள் பழமை மாறாமல், சில நாட்களாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.அறிவிப்புஇந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பாக, செங்கல்பட்டு மாவட்ட கோவில்களை புனரமைக்கவும், பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்தவும் ஆர்வம் காட்டுகிறது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில்களில் திருப்பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள, அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிலையில், 66 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் அமைக்கப்படும்.
மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில், பக்தர்கள், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த, 90 லட்சம் ரூபாய் மதிப்பில், திருமண மண்டபம் மேம்படுத்தப்படும்.
நன்கொடைமாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில், ஆளவந்தார் திருவரசு கோவில், 1 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் சங்குதீர்த்தக்குளம், திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில் கல்யாண தீர்த்தக் குளம், திருமலைவையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், நெமிலிச்சேரி அகத்தீஸ்வரர் கோவில் குளங்கள் ஆகியவை பராமரித்து மேம்படுத்தப்படும். திருப்போரூர் கந்தசாமி கோவிலில், நிர்வாக அலுவலகம், ஆதீனகர்த்தர் குடியிருப்பு என, 90 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும்.மேற்கண்ட பணிகளுக்கு அறநிலையத் துறை சார்பில் ஒதுக்கும் நிதி, ஆர்வலர்கள் வழங்கும் நன்கொடை மூலம், திருப்பணிகள் உள்ளிட்ட புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக, அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.
ரூ.90 லட்சத்தில் மண்டபம் : நெம்மேலி பகுதியில், ஆளவந்தாருக்கு கருங்கற்களில் திருவரசு கோவில் அமைக்கப்படும். பக்தர்கள் வழிபடும், ஆன்மிக இடமாக மேம்படுத்த உள்ளோம். கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலில், 90 லட்சம் ரூபாய் மதிப்பில், பக்தர்கள் பயன்பாட்டுக்காக, திருமண மண்டபம் அமைக்கப்படுகிறது.எம்.சக்திவேல், செயல் அலுவலர்,ஆளவந்தார் அறக்கட்டளை, மாமல்லபுரம்.
திருப்பணிகள் மேற்கொள்ள உள்ள கோவில்கள் : l மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர், கோதண்டராமர் கோவில்கள்
l திருக்கழுக்குன்றம் சொக்கபிள்ளையார் கோவில்
l திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் மற்றும் தியாகராஜசுவாமி கோவில்
l வல்லிபுரம் காலகண்டீஸ்வரர் கோவில்
l ஆனுார் வேதநாராயண பெருமாள் கோவில்
l பொன்மார் சக்திபுரீஸ்வரர் கோவில்
l பாலுார் பாலபதங்கிரீஸ்வரர் கோவில்
l காட்டாங்கொளத்துார் காளத்தீஸ்வரர் கோவில்
l செங்கல்பட்டு பெரியநத்தம் ஓசூரம்மன் கோவில்.