பதிவு செய்த நாள்
14
மே
2022
10:05
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், சித்திரை தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்பாள் சமேத ஐயாறப்பர் கோவிலில், கடந்த 5ம் தேதி சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து, பஞ்ச மூர்த்திகளுடன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.தொடர்ந்து, வரும் 17ல் திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று, அன்று இரவு காவிரி ஆற்றில், ஆறு ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அந்த பல்லக்குகளுடன், ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகி எழுந்தருளும் பல்லக்கும் சேர்ந்து, திருவையாறு வீதிகளில் உலா வந்து, தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறும்.
தாயுமானவர் தேரோட்டம்: தென் கயிலாயம் என போற்றப்படும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலில், சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது.சித்திரை தேர் திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமி, அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றனர். கடந்த 9ம் தேதி, செட்டிப் பெண்ணுக்கு சிவபெருமான் பெண்ணாக வந்து, பிரசவம் பார்த்து தாயுமானவரான நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள், நுாறு கால் மண்டபத்தில், தாயுமானவர் சுவாமி, மட்டுவார்குழலி அம்மை திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. நேற்று அதிகாலை 4:30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருத்தேரில் எழுந்தருளினர். காலை 6:30 மணிக்கு, சித்திரை தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் நமசிவாய கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்த தேர், 10:30 மணிக்கு நிலைக்கு வந்தது.