செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது.
செஞ்சி சிறுகடம்பூர் வடக்கு பார்த்த அம்மன் எனும் ரேணுகாம்பாள் கோவில் தேர் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 6ம் தேதி கூழ்வார்த்தல் நடந்தது. தொடர்ந்து தினமும் இரவு அம்மன் வீதியுலா நடந்து வந்தது. 9 ம் நாள் தேர்த்திருவிழாவாக நேற்று காலை குளக்கரை மாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கிரகம் புறப்பாடு நடந்தது. பகல் 12 மணிக்கு தீ மிதி விழா நடந்தது. இதில் ஏராளமன பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். பகல் 1 மணிக்கு ரேணுகாம்பாள், மாரியம்மன், பரசுராமர் ஆகிய தெய்வங்களுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை செய்தனர். மாலை 5.30 மணிக்கு அலங்கரிப்பட்ட ரேணுகாம்பாள் தேரில் ஏற்றி பக்தர்கள் வடம் பிடித்தனர். சிறுகடம்பூரில் முக்கிய வீதிகள் மற்றும் சிங்கவரம் சாலை வழியாக தேர்பவனி நடந்தது. விழா ஏற்பாடுகளை சிறுகடம்பூர் கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள், நிர்வாகிகள் செய்திருந்தனர்.