பதிவு செய்த நாள்
14
மே
2022
03:05
நாகப்பட்டினம்: நாகையில், மிகப்பழமையான அமிர்தவள்ளி சமேத சட்டநாதர் சுவாமி கோவிலில், நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகையில், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானதும், பிரசித்திப் பெற்ற அமிர்தவள்ளி சமேத சட்டநாதர் சுவாமி கோவில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி அம்பாளுடன், சேஷ, பூத,சிம்ம, வசந்த, மயில், ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துவந்தார். முக்கிய நிகழ்வாக நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து சட்டநாதர் சுவாமி நேற்று முன்தினம் இரவு அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார் நேற்று காலை கலெக்டர் அருண்தம்புராஜ், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி இயக்குனர் ராணி ஆகியோர், வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தேரில் எழுந்தருளிய சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.