திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு தனி சன்னதி கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த மே 7 அன்று சைத்ரோத்ஸவ பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் காலை, மாலை நேரங்களில் விசேஷ திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம், பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பட்டாபிஷேக ராமர் உள் மற்றும் வெளிப்பிரகார வீதியுலா வந்தார். இன்று காலை 10 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட 51 அடி உயரம் கொண்ட பெரிய தேரில் சீதா பிராட்டியார் சமேத ராமபிரான், லஷ்மணர் உற்ஸவ மூர்த்திகளாய் வீற்றிருந்தனர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து "ஹரே ராமா" கோஷம் முழங்க நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தனர். பகல் 1:00 மணி அளவில் தேர் இருப்பு நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் மீது கனிகள் வீசப்பட்டு, தீர்த்தம் தெளிக்கப்பட்டது. உற்ஸவ மூர்த்திகளுக்கு விசேஷ தீபாராதனை நடந்தது. நாளை காலை 9 மணி அளவில் ஆதி ஜெகநாத பெருமாள் கருட வாகனத்திலும், பட்டாபிஷேக ராமர் அனுமன் வாகனத்திலும் சேதுக்கரை கடற்கரையில் எழுந்தருளுகின்றனர். பின்னர் தீர்த்தவாரி உற்ஸவம் நடக்கிறது. இரவில் சந்திர பிரபை வாகனத்தில் ராமர் எழுந்தருளுகிறார். வருகிற மே 18 இல் உற்ஸவ சாந்தியுடன் பூஜை நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.