கள்ளிக்குடி: கள்ளிக்குடி அருகே பூங்குளம் புதூர் கிராமத்தில் உள்ள மலையாள பகவதி பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மே 15 ல் தொடங்கிய யாகசாலை பூஜை 4 நாட்கள் நடந்தது. உனக்கு நான் தான் கால யாக பூஜையை தொடர்ந்து கஜ பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, கன்னிகா பூஜை நடந்தது. காலை 9.30 மணிக்கு மலையாள பகவதி பத்ரகாளியம்மன் மூலஸ்தான கோபுர கலசம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்துக்கான பூஜைகளை பிள்ளையார்பட்டி வேத சிவாகம பாடசாலை முதல்வர் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், கோயமுத்தூர் ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். மாவட்டச் செயலாளர் மணிமாறன், அமைச்சர் மூர்த்தி, முன்னாள் அமைச்சர் உதயகுமார் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை தூம்பக்குளம் மற்றும் புதூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.