பதிவு செய்த நாள்
21
மே
2022
02:05
செய்யூர், :செய்யூரில் மாயமான கருங்கல்லால் ஆன முனீஸ்வரன் சிலையை, கிராம மக்கள் கிணற்றிலிருந்து கண்டெடுத்தனர்.
செய்யூர் அருகே, மேற்கு செய்யூர் கிராமத்தின் ஏரிக்கரைப் பகுதியில் முனீஸ்வரன் கோவில் உள்ளது.இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த, அப்பகுதி மக்கள் முடிவு செய்து, ஆறு மாதங்களாக திருப்பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவிலில் நிறுவுவதற்காக கருங்கல்லால் ஆன 3 அடி உயர முனீஸ்வரன் சுவாமி சிலையை தயார் செய்தனர். இந்நிலையில், கடந்த மாதம் 25ம் தேதி, கோவிலில் நிறுவுவதற்காக வைக்கப்பட்டு இருந்த முனீஸ்வரன் சுவாமி சிலையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இச்சிலையை கண்டுபிடித்து தரக்கோரி, கிராம மக்கள், போலீசாரிடம் புகார் அளித்தனர். செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் மாயமான சிலை, கோவிலுக்கு அருகே உள்ள கிணற்றில் இருப்பதை அப்பகுதி கிராம மக்கள் பார்த்து, போலீசாரின் முன்னிலையில், கிரேன் இயந்திரம் மூலமாக மீட்டெடுத்தனர்.சிலையை திருடி, கிணற்றில் வீசிய மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.