பதிவு செய்த நாள்
01
ஆக
2012
11:08
புளியங்குடி : சிந்தாமணி முப்புடாதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
புளியங்குடியை அடுத்த சிந்தாமணியில் உள்ள முப்புடாதியம்மன் கோயிலில் 22ம் ஆண்டு பூக்குழி திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 22ம் தேதி கால்நாட்டு விழா மற்றும் காப்புகட்டும் விழா நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கடந்த 28ம் தேதி தீர்த்தக்குட அம்பிஷேகம், சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 29ம் தேதி மின்னல் வேந்தர்கள் நற்பணி சங்கம் சார்பில் தீர்த்தக்குட அபிஷேகம், இரவு அலங்கார தீபாராதனைகள் நடந்தன. அதனை தொடர்ந்து கும்மிபாட்டு நிகழ்ச்சி நடந்தது. 30ம் தேதி தெலுங்கு யாதவர் சமுதாயம் சார்பில் தீர்த்தக்குடம், அபிஷேகமும், இரவு சிறப்பு பூஜையும், அலங்கார தீபாராதனை நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று பூக்குழி திருவிழா நடந்தது. அதிகாலை 4மணிக்கு கணபதி ஹோமமும், காலை 7 மணிக்கு பால்குடம், தீர்த்தக்குடம், பின்னர் கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு அம்மன் சப்பரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலையில் பூக்குழி திருவிழா நடந்தது. முன்னதாக கோயில் முன் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி கோஷம் முழங்கிட பூ இறங்கினர். நள்ளிரவு படைப்பு தீபாராதனை நடந்தது.
இன்று(1ம் தேதி) காலையில் பொங்கலிடுதல், மாவிளக்கு எடுத்தல், மதியம் சப்பரவீதியுலா, மஞ்சள் நீராட்டு விழா, முளைப்பரி எடுத்தல் நடக்கிறது. நாளை (2ம்தேதி) காலை புஷ்பாஞ்சலியும், மதியம் சிறப்பு அன்னதானமும் நடக்கிறது.
ஏற்பாடுகளை விழாக்கமிட்டியார் செய்து வருகின்றனர்.