பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக விழா .. அரசியல் கலக்காத வாறு பார்த்துக்கொள்ள வேண்டும் : தருமபுர ஆதீனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2022 01:05
மயிலாடுதுறை: பட்டினப்பிரவேசம் ஒரு ஆன்மிக விழா இதில் அரசியல் கலக்காத வாறு பார்த்துக்கொள்ள வேண்டும் தருமபுர ஆதீன மடாதிபதி வெளியிட்ட வீடியோவில் தகவல்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பழமையான தருமபுர ஆதீன மடத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழா மற்றும் குருமுதல்வர் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பட்டினப்பிரவேச விழா இன்று இரவு நடைபெறுகிறது. தருமபுரம்ஆதீனம் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் வீதி உலாவும், தொடர்ந்து ஞான கொலு காட்சியும் நடைபெறுகிறது. இந்த பட்டினப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்து பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மீண்டும் தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இதனால் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இன்றைய நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆதீனம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான இந்த நிகழ்ச்சியை அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பதால் அரசியலாக்க கூடாது என்று ஆதினம் தரப்பில் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு கருமை ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஒரு வீடியோ குறிப்பு வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இது ஒரு ஆன்மீக நிகழ்வு இதனை அரசியல் ஆக்காமல் கொண்டு செல்வதற்கு ஆதினம் பாதை வகுத்துள்ளதாகவும், திரளான பக்தர்கள் சிவனடியார்கள் இவ்விழாவில் பங்கேற்க வேண்டுமென்றும் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என்று அவர் வெளியிட்டுள்ள காணொளி செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.