பதிவு செய்த நாள்
25
மே
2022
12:05
வாரணாசி : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பாக நடத்தப்பட்ட கள ஆய்வு குறித்த ஆட்சேபனைகளை, ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினர் தாக்கல் செய்ய, வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடக்கிறது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் உலக புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இதை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார கவுரியை தினமும் வழிபட அனுமதி கோரி, ஹிந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதை விசாரித்த வாரணாசி சிவில் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது. இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை வாரணாசி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வாரணாசி மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஸ், நேற்று முன்தினம் விசாரணையை துவக்கினார்.சிருங்கார கவுரியை தினமும் வழிபட அனுமதி கோரும் ஹிந்துக்களின் மனுக்களை முதலில் விசாரிப்பதா அல்லது கள ஆய்வு நடத்த அனுமதி அளித்ததை எதிர்த்து முஸ்லிம்கள் தொடர்ந்த வழக்கை முதலில் விசாரிப்பதா என்பது குறித்து, நேற்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. இந்நிலையில், இரண்டாவது நாளாக, நேற்றும் விசாரணை நடந்தது. அப்போது, கள ஆய்வு அறிக்கை தொடர்பான விவகாரத்தில், இரு தரப்பும் தங்களுடைய ஆட்சேபனைகளை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை, நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.