அபாய நிலையில் வரலாற்று சிறப்புமிக்க கூடலுார் ஈஸ்வரன் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மே 2022 04:05
கூடலுார்: கூடலுாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈஸ்வரன் கோயில் முழுமையாக அழிவதற்கு முன் சீரமைக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கூடலுார் தாமரைக்குளம் ரோட்டில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஈஸ்வரன் கோயில் உள்ளது. கேரளா பூஞ்சையாறு அரச வம்சத்தைச் சேர்ந்த பூஞ்சையாறு தம்பிரான் கட்டப்பட்டதாக வரலாறு. மன்னர் ஆட்சிக் காலத்தில் இங்கு சிறப்பாக பூஜை நடந்துள்ளது. கோயிலுக்கு முன் பகுதியில் தெப்பக்குளம் மற்றும் விவசாய நிலம் உள்ளது. மன்னர் வெளியேறியபின் இங்குள்ள சிலரிடம் ஒப்படைக்கப்பட்டு நிலத்தின் மூலம் வரும் வருவாயை வைத்து பராமரிப்பு மற்றும் பூஜை நடந்து வந்தது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கோயில் கோபுரத்தில் உள்ள சிற்பங்கள் சேதமடைந்தன. முன்பகுதியில் உள்ள மண்டபத்தூண் மற்றும் முகப்புப் பகுதி உடைந்தது. கோபுரத்தின் அடிப்பகுதியில் கற்கள் பெயர்ந்து சாய்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இருந்தபோதிலும் செவ்வாய், வெள்ளியில் பக்தர்கள் ஆபத்தான நிலையில் கோயிலுக்குள் சென்று அச்சத்துடன் வணங்கி வருகின்றனர். முழுமையாக அழிவதற்கு முன் இதனை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சதீஷ்பாபு, பாரதிய கிசான் சங்கம் மாவட்ட தலைவர், கூடலுார்: கூடலுார் ஈஸ்வரன் கோயில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தில் தனி சர்வே எண் 1468ல் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் அழியும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் கோயில்களை சீரமைக்க அரசு சார்பில் ரூ.341 கோடி கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை மூலமாக இக் கோயிலை சீரமைக்க அரசு முன்வர வேண்டும்.