பதிவு செய்த நாள்
26
மே
2022
05:05
மேட்டுப்பாளையம்: பாதியில் நிற்கும், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ராஜகோபுரம் கட்டுமான பணிகள், எப்போது துவங்கும் என பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.
கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பவானி ஆற்றின் கரையோரம் இக்கோவில் அமைந்துள்ளதால், தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோவில் ஆடிக்குண்டம் விழாவில், ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். பக்தர்கள் போடும் உண்டியல் காணிக்கைகள், கடைகள் ஏலம் விடுவதன் வாயிலாக ஆண்டுக்கு, 7 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த அம்மன் கோவிலில், ராஜகோபுரம் அமைக்கும்படி, பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அரசு அனுமதி அளித்ததன் பேரில், 2016ம் ஆண்டு, ராஜகோபுரம் கட்டுமான பணிகள் துவங்கின. ஏழுநிலை ராஜகோபுரம் இப்பணிகள், மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கும் படி ஒப்பந்தத்தில் கூறப்பட்டது. அஸ்திவாரம் மற்றும் கல்காரப் பணிகள் செய்து கொண்டிருந்தபோது, டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி., காரணமாக கோபுரம் கட்டுமானப்பணிகள் செய்யாமல் நிறுத்தினார். அதனால் கடந்த, 2019 டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு கடந்த, 3 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் ஏதும் நடைபெறாமல் உள்ளன.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தமிழக ஹிந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து, வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை, பேரூர் உள்ளிட்ட, மாவட்டத்தில் பல்வேறு கோயில்களுக்குச் சென்று ஆய்வு செய்தார். ஆனால் கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, வனபத்ரகாளியம்மன் கோவில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளன. அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி, உடனடியாக கட்டுமானப் பணிகளை துவக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உதவி கமிஷனர் கைலாச மூர்த்தி கூறுகையில்," கோவிலின் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள், 5.20 கோடி ரூபாய்க்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்து, ஹிந்து சமய அறநிலை துறை கமிஷனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன், கோவில் நிதியிலிருந்து, ராஜகோபுர கட்டுமான பணிகள் துவங்கும்," என்றார்.