திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கோட்டையிருப்பு சூரமாகாளியம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இக்கோயிலில் வைகாசி இரண்டாம் செவ்வாய்கிழமையன்று மழை பெய்ய பிரார்த்தித்து பக்தர்கள் இந்த விழாவை கொண்டாடுகின்றனர்.
கொரோனா தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டாடமுடியவில்லை. இதனால் இந்த முறை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்தும் குடும்பத்தினர் சகிதமாக வந்து விழாவில் பங்கேற்றனர். கிராம காப்பு கட்டி விழா துவங்கியது. கிராமத்தினர் விரதமிருந்து கோயிலில் சாமி வழிபாடு நடத்தி வந்தனர். நேற்று மாலை 3 மணிக்கு மேல் பெண்கள் சூரமாகாளியம்மன் கோவிலில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். தொடர்ந்து ஊர் திடலில் உள்ள சூரமாகாளியம்மன் சன்னதியிலிருந்து சாமியாடி தலையில் கரகம் சுமந்தும், கோடியூர் அய்யனார், கருப்பர் உள்ளிட்ட சாமியாடிகள் சாமி ஆட்டம் ஆடியும் வீதி உலா வந்தனர். செல்லும் வழியில் பெண்கள் மஞ்சள் கலந்த நீரை ஊற்றி ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.