பதிவு செய்த நாள்
27
மே
2022
06:05
உத்திரமேரூர் : சாத்தணஞ்சேரி, பச்சையம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்த நிலையில் ஜூன் 3ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது, சாத்தணஞ்சேரி கிராமம். இப்பகுதி பாலாற்றங்கரை மீது, கிராமத்திற்கு சொந்தமான 600 ஆண்டுகள் பழமையான பச்சையம்மன் கோவில் உள்ளது. அப்பகுதியினர் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராம வாசிகளும் சக்தி வாழ்ந்த அம்மனாக இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர்.
குழந்தையின்மை, திருமணவரம், மனநிலை பாதிப்பு, தீராத நோய் போன்ற பிரச்சினைகளுக்கு, இக்கோவிலில் பிரார்த்தனை செய்தால் குடும்ப சிக்கல்கள் தீரும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சிறிய வடிவிலாக இருந்த பச்சையம்மன் கோவிலுக்கு, ராஜகோபுரத்தோடு மண்டபம் ஏற்படுத்தி, பல்வேறு சுவாமி சிலைகள் அமைத்து வழிபட அப்பகுதி வாசிகள் தீர்மானித்தனர். அதன்படி, புதிதாக கருவறை கோபுரம், ராஜகோபுரம், மகாமண்டபம் என கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மேலும், கோவில் வளாகத்திற்குள்ளே விநாயகர், முருகன், சிவதுர்கை, முடியால் அழகி, பூங்குழலி, நாகத்தம்மன், பைரவர், ஆஞ்சநேயர், தட்சணாமூர்த்தி, சிவன், நவகிரகம், சப்தகன்னி உள்ளிட்ட தெய்வங்களுக்கான சுவாமி சிலைகள் புதிதாக அமைக்கப்பட்டது. ஏற்கனவே, கோவில் வளாகத்தில் இருந்த மதுரை வீரன் மற்றும் ஜடாமுனி, வாழ்முனி, செம்முனி, கருமுனி, தவமுனி, சங்குமுனி, நாகமுனி ஆகிய சுவாமி சிலைகளும் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டது. இக்கோவிலுக்கான கட்டுமான பணிகள் அனைத்தும், தற்போது நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. ஜூன் மாதம் 3ம் தேதி, இக்கோவிலுக்கான மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. இதற்காக யாகசாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை விழா குழுவினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.