நத்தம்: நத்தம் அருகே சாத்தாம்பாடியில் வீரமுடையான், வேட்டைக்காரன், அய்யனார், கன்னிமார் சுவாமிகளுக்கு புரவி எடுப்பு திருவிழா நடந்தது.
விழாவையொட்டி கடந்த மே 20 சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மே 27 வீரமுடையான், வேட்டைக்காரன், அய்யனார், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் மற்றும் உப தெய்வங்களின் சிலைகள் குதிரை, மாடு , நாய் உள்ளிட்ட வாகனங்களின் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு சாமி புறப்பாடு நடந்தது. இதில் வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. அதனைத் தொடர்ந்து மந்தை முத்தாலம்மன் கோவிலுக்கு உலா வருதல் நடந்தது. நேற்று மே 28 மாலை பக்தர்கள் ஆரவாரத்துடன், அதிர்வேட்டுகள் முழங்க சுவாமிகள் கோவிலுக்கு செலுத்துதல் நிகழ்ச்சியில் சாமிகள் இருப்பிடம் கொண்டு செலுத்தப்பட்டதுடன் திருவிழா நிறைவடைந்தது. இதில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் புரவி எடுப்பு திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சாத்தாம்பாடி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.