பதிவு செய்த நாள்
28
மே
2022
03:05
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், அதிகாலை நேரத்தில் சிறுத்தை உலாவரும் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி உள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், அதிகாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில், மலை மேல் உள்ளதால், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் என, வன விலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. கோவிலுக்கு அருகில், 65 குடும்பங்கள் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதிகாலை, 2:30 மணிக்கு, மலை மேல் உள்ள கோவிலின் இடதுபுறத்தில் உள்ள தேர் நிறுத்துமிடத்தில், சிறுத்தை ஒன்று நடமாடும் சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,"அதிகாலை, சுமார், 2:30 மணிக்கு, நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. அப்போது, கோவிலுக்கு இடதுபுறம் உள்ள தேர் நிறுத்தும் இடத்தின் அருகில், நாய் ஒன்று, 5 குட்டிகளை ஈன்றுள்ளது. அங்கு வந்த சிறுத்தை ஒன்று, அதில் ஒரு குட்டியை தூக்கி சென்றுள்ளது," என்றனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறுகையில்,"மருதமலையில் வனப்பகுதியில் கோவில் அமைந்துள்ளது. சிறுத்தை வந்து சென்றது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அச்சிறுத்தையின் நடமாட்டம், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,"என்றார்.