பதிவு செய்த நாள்
28
மே
2022
03:05
கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் மகிபாலன்பட்டி பூங்குன்ற நாயகி அம்மன் கோயிலில் இரண்டாவது முறையாக உண்டியலில் திருட்டு நடந்துள்ளதால் பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இக்கோயிலில் நேற்று காலை வழக்கம் போல் பட்டர் கோயிலைத் திறந்து உள்ளே சென்றுள்ளார். உள்ளே மூலவர் சன்னதி முன்பாக உள்ளஉண்டியல் பூட்டை உடைத்து திறந்து கிடந்ததையும், நாணயங்கள் சிதறிக் கிடந்தையும் பார்த்தார். தகவல் அறிந்த கண்டவராயன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், எஸ்.ஐ., சேது ஆகியோர் திருட்டு நடந்தது குறித்து விசாரித்தனர். மோப்ப நாய் சோதனையும் நடந்தது. விசாரணையில், கோயிலின் மேற்கு வாயில் கதவை பூட்டை அறுத்து உள்ளே திருடன் நுழைந்ததும், கையுறை, கண்ணைத் தவிர தலைமுழுவதும் கவசமணிந்து திருடன் வந்ததும், அலாரமணி இயங்கவிடாமல் தடுத்துள்ளது, கேமிராவை கம்பால் திசை திருப்பி வைத்ததும் தெரியவந்துள்ளது. கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூபாய் நோட்டுக்கள், தங்க,வெள்ளி நகைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சுமார் 5 கி.மீ.துாரத்திலுள்ள வனத்துறை காட்டில் வைத்து முக்கிய நகைகள்,பக்தர்களின் காணிக்கை பொருட்கள்,ரூபாய்களை மட்டும் எடுத்துக்கொண்டு சில்லறை நாணயங்களை சிதறவிட்டு சென்றதும் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதே கோயிலில் கடந்த ஆண்டும் உண்டியல் திருட்டு நடந்ததும், இதுவரை துப்புத் துலக்காததும் குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் கூறுகையில்,‛ கோயில் விழா அண்மையில் நடந்துள்ளதால் உண்டியலில் அதிக மதிப்புள்ள காணிக்கை பொருட்கள் இருந்திருப்பது தெரிந்து திருட்டு ந டந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ளது. அறநிலையத்துறையினர் கோயிலின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விரைவில் குற்றவாளியை பிடி்த்தால் தான் உண்டியல் திருட்டு முடிவுக்கு வரும்’ என்று கவலை தெரிவித்தனர்.