மரத்தின் மீதிருந்த சேவல் ஒன்று கூவியதைக் கேட்ட நரி ஒன்று அதைக் கொல்ல வந்தது, மரத்தின் மீது இருந்ததால் அதைப் பிடிக்க முடியவில்லை. அதற்காக, ‘‘சகோதரா... கேள்விபட்டாயா? நேற்று முதல் பறவைகள், மிருகங்களுக்கு இடையே சண்டையிடக் கூடாது, ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என முடிவாகி உள்ளது. நீ கீழே வந்தால் இதைப் பற்றி சொல்கிறேன்’’ என்றது நரி. அதன் தந்திரம் அறிந்த சேவல் துாரத்தில் எதையோ பார்ப்பது போல் தலையைத் துாக்கியது. ‘‘சகோதரா! அக்கறையாக எதையோ பார்க்கிறாயே என்ன தெரிகிறது? எனக் கேட்டது. ‘‘அங்கே வேட்டை நாய்கள் வருவது போலத் தெரிகிறது. அதைத் தான் பார்க்கிறேன்’’ நரிக்கு உடல் நடுங்க ஆரம்பித்தது “சரி, சரி நாம் அப்புறம் பேசலாம்’’ என்றது. ‘‘இதோ வருகிறேன். ஏன் பயப்படுகிறாய்? இப்போது தானே...அனைவரும் ஒற்றுமையாக வாழ முடிவு செய்துள்ளதாகச் சொன்னாயே’’ “அது பற்றி நாய்களுக்கு தெரியாமல் இருந்தால் என் கதி என்னாவது?’’ என்று சொல்லியபடி ஓட்டம் பிடித்தது. ‘‘உன் பொய் என்னிடம் பலிக்காது” என சிரித்தது சேவல். கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.