பதிவு செய்த நாள்
03
ஆக
2012
12:08
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, தெடாவூர் கிராமத்தில், ஆடிப்பெருக்கு நாளில், 60 அடி உயர கூத்தாண்டவர் கோவிலில், தேன் கூடுகள் கட்டி தேர் இழுக்கும்,சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, தெடாவூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன், கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆடிப்பெருக்கு நாளில், தேர்த்திருவிழா நடந்து வருகிறது.இந்த ஆண்டு, ஜூலை 15ம் தேதி, கூத்தாண்டவர் ஸ்வாமிக்கு, வெளி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன், தேர்த்திருவிழா துவங்கியது. 31ம் தேதி, அய்யனாருக்கு பொங்கல், மாவிளக்கு பூஜைகள் நடந்தது. நேற்று, அதிகாலை, 3 மணியளவில், வசிஷ்ட நதியில் இருந்து, கூத்தாண்டவர் ஸ்வாமிக்கு பூஜை செய்து, கண் திறக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. ஆடிப்பெருக்கு நாளில், காலை, 6.30 மணியளவில், தேன் கூடுகளும், பல்வேறு மலர்களிலும், விவசாய நிலத்தில் விளைந்த பாக்கு, கடலை, நெல் போன்ற தானியங்களால் அலங்கரிக்கப்பட்ட, 60 அடி உயரம் கொண்ட கூத்தாண்டவர்
தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர். முக்கிய வீதி வழியாக சென்ற தேர், நேற்று மாலை 5 மணியளவில், கோவில் நிலை நிறுத்தப்பட்டது. இவ்விழாவில், ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், தெடாவூர், தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதுகுறித்து, தெடாவூர் கிராம மக்கள் கூறியதாவது: கூத்தாண்டவர் ஸ்வாமிக்கு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை தேர்த்திருவிழா நடத்துவது வழக்கம். தேன் கூடுகளையும், விளை நிலத்தில் விளைந்த தானியங்களையும் கட்டி வைத்து, சூரிய உதயம் துவங்கியதும் தேர் இழுத்து செல்லப்படுகிறது.
தேரில் கட்டப்படும் தேன் கூட்டில் இருந்து வெளியேறும் தேனீக்கள், தேர் இழுத்து செல்லும் போது, பக்தர்கள் யாரையும் கடிப்பதில்லை. இந்த தேனீக்களை, கடவுளாக வழிபாடு செய்கிறோம். இவ்வாறு கூறினர்.