பதிவு செய்த நாள்
31
மே
2022
10:05
திருப்பதி :திருமலை ஏழுமலையானை, நேற்று முன்தினம் மட்டும், 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க கோடை விடுமுறையை ஒட்டி பக்தர்கள் அதிக அளவில் வரத் துவங்கி உள்ளனர். வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. வார இறுதி நாட்களில் வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்து, தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் பக்தர்களின் கூட்டம் வார இறுதியில் 70 ஆயிரத்தை தொடுகிறது. தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால், பக்தர்களை டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு அனுப்பி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள, 19 அறைகளிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனர். எனவே, தர்ம தரிசனத்திற்கு ஏழு மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 2 - 3 மணி நேரமும் தேவைப்படுகிறது. காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படு கின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் 90 ஆயிரத்து 885 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்; 35 ஆயிரத்து 707 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சர்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளன.
பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஏழுமலையானுக்கு இரவு 11:30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12:00 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.தரிசன அனுமதியுள்ள பக்தர்கள் 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.